பீஹார், செப்டம்பர் -17, இந்தியா, பீஹாரில் மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தை காணாமல் போன மர்மம் CCTV கேமரா உதவியுடன் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சனிக்கிழமை இரவு பிறந்த குழந்தை, மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளைப் பராமரிக்கும் அறையில் வைக்கப்பட்ட நிலையில், ஞாயிறு மாலை அது காணாமல் போனது பரபரப்பை ஏற்படுத்தியது.
குழந்தை எப்படி காணாமல் போனது என்பது குறித்து மருத்துவமனைப் பணியாளர்களிடம் உரிய பதிலில்லை.
கேட்டால், மருத்துவமனைக்கு தினந்தோறும் ஏராளமானோர் வந்து போகின்றனர்; குழந்தையை யார் எடுத்திருப்பார்கள் என்று எப்படி தெரியுமென பொறுப்பற்ற பதில் வந்துள்ளது.
இதனால் சினமடைந்த குடும்பத்தார் CCTV கேமராவைப் போட்டுக் காட்ட வற்புறுத்திய போதே குழந்தை திருடு போனது தெரிய வந்தது.
பிறந்த குழந்தைகள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் பெண்ணொருவர் சர்வ சாதாரணமாக நுழைந்து, அந்த ஆண் குழந்தையை ஒரு துணியில் போர்த்தி, வளாகத்தை விட்டு வெளியேறும் காட்சிகள் CCTV-யில் பதிவாகியுள்ளது.
குழந்தைகள் வார்ட்டில் குழந்தைகள் காணாமல் போகும் அளவுக்கு பாதுகாப்பு அம்சங்கள் பலவீனமாக இருப்பது கண்டு அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்துள்ள குடும்பத்தார், குழந்தை தங்களின் கைகளுக்குத் திரும்பக் கிடைத்தே ஆக வேண்டுமென விடாப்பிடியாகக் கூறியிருக்கின்றனர்.
இது குறித்து உடனடி விசாரணை நடத்தப்படுவதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.