
ஸ்டாக்ஹோம், ஆகஸ்ட்டு 30 – ஜப்பானின் பாதிக்கப்பட்ட புகுஷிமா டாய்ச்சி அணுமின் ஆலையிலிருந்து வெளியாகும் கழிவு நீரில், டிரியத்தின் செறிவு எதிர்பார்க்கப்பட்ட அளவை காட்டிலும் குறைவாக உள்ளது. அது மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தாது என, ஐநாவின் அணு கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரபேல் க்ரோஸி (Rafael Grossi) கூறியுள்ளார்.
இதுவரை வெளியேற்றப்பட்ட முதல் கட்ட நீரில், அபாயகரமான அளவில் அணு இரசாயனம் எதுவும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் க்ரோஸி சொன்னார்.
12 ஆண்டுகளுக்கு முன் ஜப்பானை உலுக்கிய இரட்டை பேரிடர்களில் புகுஷிமா அணு ஆலை மோசமாக சேதமடைந்தது. உலகில் நிகழ்ந்த மிக மோசமான அணுசக்தி விபத்துகளில் ஒன்றாகவும் அது கருதப்படுகிறது.
அதன் பின்னர், சுமார் 540 ஒலிம்பிக் நீச்சல் குளங்களை நிரப்பும் அளவுக்கு சேர்ந்து வைத்திருந்த, புகுஷிமா அணு ஆலையின் கழிவு நீரை, கடந்த வாரம் தொடங்கி, பசிபிக் பெருங்கடலில் வெளியேற்றி வருகிறது ஜப்பான்.
அந்த ஆலையிலிருந்து, கடைசி துளி நீர் வெளியாகும் வரையில், அணுக்கமான கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடருமென க்ரோஸி கூறியுள்ளார்.
புகுஷிமா அணு ஆலை நீர் பாதிப்பை ஏற்படுத்தாது என ஜப்பான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், அந்நடவடிக்கை உள்ளூர் மீனவர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளதோடு, ஜப்பானிலிருந்து கடல்வாழ் உணவுப் பொருட்கள் இறக்குமதியை நிறுத்தியிருக்கும் சீனாவை சினமடையச் செய்துள்ளது.