
கோலாலம்பூர், ஆகஸ்ட்டு 24 – புகுஷிமா டாய்ச்சி (Fukushima Daaiichi) அணு மின் ஆலையிலிருந்து, சுத்திகரிக்கப்பட்ட நீரை கடலில் விடும் நடவடிக்கையை, மலேசிய நேரப்படி இன்று நண்பகலில் ஜப்பான் தொடங்கியுள்ளது.
அதனால், சம்பந்தப்பட்ட கடல் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில், பதிவாகும் கதிரியக்க அளவை, IAEA – அனைத்துலக அணுசக்தி நிறுவனத்தின் உதவியுடன் ஜப்பான் தொடர்ந்து கண்காணிக்கும்.
கதிரியக்க அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவை தாண்டிலால், நீரை வெளியேற்றும் நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்படும் அல்லது தடை செய்யப்படும்.
அனைத்துலக அணுசக்தி நிறுவனத்தின் உதவியுடன், பாதுகாப்பான வெளியேற்றத்தை உறுதிச் செய்யும் கடப்பாட்டை, ஜப்பானும், Tepco எனப்படும் தோக்கியோ மின்சார உற்பத்தி நிறுவனமும் கொண்டுள்ளதாக, மலேசியாவுக்கான ஜப்பானிய தூதரகத்தின் செயலாளர் Yosuke Kurotani தெரிவித்தார்.
அதனால், ஜப்பானிய அரசாங்கம் மற்றும் டெப்கோவின் காண்காணிப்பு நடவடிக்கைகளின் முடிவுகள், உள்நாட்டில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் பகிரங்கமாக அறிவிக்கப்படும் என Kurotani கூறியுள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளாக, கதிரியக்கத்தால் மாசடைந்த நீரை, ஜப்பான் தொட்டிகளில் சேகரித்து வருகிறது. எனினும், இடப்பற்றாக்குறை காரணமாக அதனை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கதிரியக்கத்தால் மாசடைந்த நீரை கடலில் கலக்க விடும் ஜப்பானின் முடிவுக்கு, அதன் அண்டை நாடுகளான தென் கொரியாவும், சீனாவும் தொடர்ந்து எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றன.
ஜப்பானின் அந்த செயல், எதிர்மறையான, நீண்டகால விளைவுகளை ஏற்படுத்துமென அவை அஞ்சுகின்றன.