
ஈஜோக், செப் 4 – நாட்டில் 528வது தமிழ்ப்பள்ளியான சுங்கை பீலேக்கில் அமைந்திருக்கும் புக்கிட் ஈஜோக் தோட்டத் தமிழ்ப்பள்ளி அதிகாரப்பூர்வமாக துவக்கம் கண்டது.
30 ஆண்டுக்கால பல்வேறு சவால்களுக்கு பிறகு இப்புதிய பள்ளி துவக்கம் கண்டிருப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக பள்ளி வாரியத் தலைவர் சந்திரசேகரன் அருணாச்சலம் தெரிவித்தார்.
2016ல் முன்னாள் பிரதமர் பள்ளி மாற்றலுக்கும் நிர்மாணிப்புக்கும் ஒப்புதல் அளித்து 3 ஏக்கர் நிலத்தில் 35 லட்சம் ரிங்கிட் செலவில் இப்பள்ளி கட்டப்பட்டது.
கடந்த 2018ல் பக்காதான் ஹராப்பான் அரசாங்கத்தின் வழி 8 லட்சம் ரிங்கிட் கூடுதல் மானியம் வழங்கப்பட்டதாக சந்திரசேகரன் கூறினார்.
இப்பள்ளி நிர்மாணிப்புக்கு பல்வேறு நிலைகளில் ஒத்துழைப்பை வழங்கிய அனைவருக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
டத்தோ வீ.கே.செல்லப்பன், முன்னாள் கல்வி துணையமைச்சர் பி.கமலநாதன், தியோ நீ சிங் அவர்களில் அடங்குவர் என்றார் அவர்.
உபகரணப் பொருட்கள் வாங்குவதற்கு உதவி செய்த மித்ராவுக்கும் தஒடர்ந்து ஆதரவு வழங்கிய கல்வி அமைச்சுக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
தற்போது பிற பள்ளிகளிலிருந்து மாற்றலாகி வந்த ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பைச் சேர்ந்த 16 மாணவர்கள் இன்று தங்களின் வகுப்பை தொடங்கினர்.
சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த இன்னும் அதிகமான மாணவர்கள் இப்பள்ளியில் சேர வேண்டும் என எதிர்பார்ப்பதாக சந்திரசேகரனும், பள்ளியில் தலைமையாசிரியர் சரவணனும் கேட்டுக் கொண்டனர்.
2024ஆம் ஆண்டில் முதலாம் வகுப்பில் சேரும் மாணவர்கள் இப்போதே வந்து பதியுமாறும் பெற்றோர்களுக்கு அழைப்பு விடுத்தனர்.