
நாட்டின் வேலை சந்தையில் காலியாக இருக்கும் சுமார் எட்டு லட்சம் இடங்களை உள்நாட்டவர்களை கொண்டு நிரப்ப ஏதுவாக, சம்பள விகிதம் அதிகரிக்கப்பட வேண்டுமென, மனிதவள அமைச்சர் வி.சிவக்குமார் முன்வைத்துள்ள பரிந்துரையை, சட்டதிட்டங்கள் மற்றும் அரசாங்கத்தின் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளின் வாயிலாக மட்டுமே செயல்படுத்த முடியுமென, SPCAAM – மலேசிய சமூக பாதுகாப்பு சந்தாதாரர் ஆலோசனை சேவை கழகம் கூறியுள்ளது.
அவ்விவகாரத்தில், வணிக சமூகத்திடமிருந்து எந்த ஒரு நேர்மறையான நடவடிக்கையையும் எதிர்பார்க்க முடியாது என அது குறிப்பிட்டது.
நடப்பு பொருளாதார சூழலுக்கு சிறிதும் ஒத்து வராத நடைமுறைகளை செயல்படுத்தி வருவதோடு, அந்நிய தொழிலாளர்களை தருவித்து, மனித நேயமின்றி அவர்களை துன்புறுத்தி, மலேசியர்களால் அறவே ஏற்றுக் கொள்ள முடியாத சம்பளத்தை அவர்களுக்கு கொடுத்து வேலை வாங்கும் போக்கை, மலேசிய வணிக சமூகம் கடைபிடித்து வருகிறது.
அதன் வாயிலாக, வணிக நிர்வாக செலவினங்களை குறைக்க முடியும் என்பதோடு, தொழிலாளர்களை தவறாக கையாளும் நடைமுறை பின்பற்றப்படுவதையும், SPCAAM சுட்டிக் காட்டியது.
அதனால், தொழிலாளர் உரிமைகளுக்கு முன்னுரிமை அளிக்கும், முறையான சீர்திருத்த கொள்கைகள் வாயிலாக, நாட்டின் வேலை சந்தையில் அரசாங்கம் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டுமெனவும் SPCAAM கேட்டுக் கொண்டுள்ளது.