கோலாலம்பூர், ஆக 6 -குறைந்த வருமானம் பெறுவோர் சொந்த வீட்டை கொண்டிருப்பதை உறுதிப்படுத்துவதற்காக தனது ஒவ்வொரு வீடமைப்பு திட்டத்திலும் மடானி வீடமைப்பு புளோக்கை தயார்படுத்தும்படி கூட்டரசு பிரதேசத்துறை மற்றும் கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார். மக்களுக்கு நன்மையை கொண்டுவரும் புதிய வீடமைப்பு திட்டங்கள் அங்கீகரிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கான நிபந்தனைகளில் ஒன்றாக மடானி புளோக் இடம் பெற வேண்டும் என அன்வார் கூறினார். அரசாங்க ஊழியர்களுக்கு மட்டுமின்றி B40 குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் M40 எனப்படும் நடுத்தர வருமானம் பெறும் தரப்பினர் நன்மை அடையும் பொருட்டு புதிய வீடமைப்பு திட்டங்களில் குறைந்த பட்சம் இரண்டு புளோக்குகளாவது மாடானி வீடுகள் இருக்க வேண்டும் என அன்வார் வலியுறுத்தினார்.
பணக்காரர்களுக்கு பல கோடி ரிங்கிட்டு விலையில் வீடு கட்டுவதாக இருந்தாலும் கட்டுங்கள். அது குறித்து நான் பொருட்படுத்த மாட்டேன். ஆனால் இதர மக்களுக்கு உதவ வேண்டும். எனவே வீடமைப்பு பிரச்சனைக்கு அரசாங்கம் தீர்வ காண வேண்டும் என விரும்புகிறேன். மாநகர் மன்ற வீடுகளுக்காக 60,000 பேர் காத்திருப்பதாக பண்டார் ஸ்ரீ பெர்மைசூரிரியில் மலேசிய பொதுச்சேவை பணியாளர்களுக்காக மடானி வீடமைப்பு திட்டத்தை தொடக்கிவைத்தபோது அன்வார் தெரிவித்தார்.