கோலாலம்பூர், செப்டம்பர் -17, இந்தியாவின் தேசிய விமானச் சேவை நிறுவனமான ஏர் இந்தியா (Air India), புது டெல்லிக்கும் – கோலாலம்பூருக்குமான புதிய தினசரி இடைவிடா பயணச் சேவையைத் தொடக்கியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை புது டெல்லியிலிருந்து பயணிகளுடன் KLIA வந்திறங்கிய முதல் விமானத்துக்கு, பாரம்பரிய முறைப்படி தண்ணீர் பீய்ச்சியடித்து வரவேற்புக் கொடுக்கப்பட்டது.
அவ்விரு முக்கிய நகரங்களுக்கான பயண வசதியின் புதிய அத்தியாயத்தின் தொடக்க விழாவும் அதன் போது KLIA-வில் நடைபெற்றது.
அதில் மலேசியாவுக்கான இந்திய உயர் ஆணையர் பி.என்.ரெட்டி (B.N.Reddy) சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அவர் தமரையில், இந்தியா மற்றும் மலேசியா இடையே கலாச்சார மற்றும் பொருளாதார பிணைப்புகளை இப்புதியப் பாதை வலுப்படுத்துமென்றார்.
ஏர் இந்தியா தனது இப்புதிய வழித்தடத்திற்காக Airbus A320neo விமானத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது.
இரண்டு-வகுப்பு கட்டமைப்பில் நவீன வசதிகளுடன் பயணிகளுக்குக் கூடுதல் அனுபவத்தையும் ஆற்றலின் மகிமையையும் அது வழங்குகிறது.
புது டெல்லி-கோலாலம்பூர் சந்தைக்கான இந்த விரிவாக்கம், நேரடி விமானங்களுக்கு அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு வியூக நடவடிக்கையாகும்.
இது பயண நேரத்தை குறைப்பதோடு ஒட்டுமொத்த பயணிகளின் அனுபவத்தையும் மேம்படுத்தும்.
இப்புதியப் பயணச் சேவை, போட்டித்தன்மைமிக்க விலையை வழங்குவதோடு மலேசியப் பயணிகளை ஏர் இந்தியாவின் விரிவான கட்டமைப்புடன் இணைக்கிறது.
தவிர, சுற்றுலா மற்றும் வணிக பரிமாற்றங்களை மேம்படுத்துவதற்கும் வழி வகுப்பதாக Oscar Travel பயண நிறுவனத்தின் இயக்குனர் ஆண்டி செங்கியா (Andy Sengiah) தெரிவித்தார்.
ஏர் இந்தியா சார்பாக, Oscar Travel Services இங்கு முன்பதிவு மற்றும் டிக்கெட்டுகளை கையாளுவதோடு, விளம்பர நடவடிக்கைகளுக்கும் உதவுகிறது.
இந்த ஒத்துழைப்பானது, விமானத்தின் சந்தை இருப்பை மேம்படுத்துவதையும் அதன் உலகளாவிய விரிவாக்க முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக ஆண்டி கூறினார்.