கோலாலம்பூர், டிசம்பர்-28, 2025 புத்தாண்டு வரவேற்புக் கொண்டாட்டங்களை முன்னிட்டு RapidKL இரயில் சேவைகளின் நேரம் ஜனவரி 1-ஆம் தேதி அதிகாலை 3 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.
அதே சமயம், குறிப்பிட்ட சில வழித்தடங்களுக்கான Rapid பேருந்து சேவைகள் அதிகாலை 3.30 மணி வரை நீடிக்குமென Prasarana நிறுவனம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
இச்சேவை நேர நீட்டிப்பு, மொத்தமாக 18 இரயில் நிலையங்களையும், 4 BRT பேருந்து நிலையங்களையும், 20 RapidKL பேருந்து நிலையங்களையும் உட்படுத்தியுள்ளது.
இது தவிர, புத்தாண்டு வரவேற்புக் கொண்டாட்ட இடங்களுக்குப் பொது மக்கள் செல்ல வசதியாக, டிசம்பர் 31-ஆம் தேதி இரவு 7.30 மணி தொடக்கம் அனைத்து வழித்தடங்களிலும் இரயில்கள் வந்திறங்குவதும் விரைவுப்படுத்தப்படும்.
பயணங்கள் சுமூகமாக அமைவதை உறுதிச் செய்ய, உதவி போலீசார், செயல்பாட்டு ஊழியர்கள் என RapidKL-லின் 2,731 முன்களப் பணியாளர்கள் புத்தாண்டு அதிகாலை கடமையில் ஈடுபட்டிருப்பர்.
சேவை நேரம் நீட்டிக்கப்பட்டிருப்பதன் வாயிலாக, புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் பங்கேற்று விட்டு திரும்பும் நேரத்தை பயணிகள் திட்டமிட வாய்ப்பேற்பட்டுள்ளது.
அதே சமயம், புத்தாண்டு வரவேற்புக் கொண்டாட்டங்கள் நடைபெறும் இடங்களுக்கருகே உள்ள இரயில் நிலையங்களில் நெரிசலைக் குறைக்க முடியுமென Prasarana கூறியது.
பயணங்களைச் சுமூகமாக்க Touch ‘n Go அட்டைகளைப் பயன்படுத்தவும், அதில் போதிய அளவு பாக்கி இருப்பதை பயணங்களைத் தொடங்கும் முன்னரே உறுதிச் செய்யவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.