கோலாலம்பூர், ஜனவரி-3 – டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கிற்கு ஆதரவாக வரும் திங்கட்கிழமை புத்ராஜெயாவில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளப் பேரணியில், பக்காத்தான் ஹராப்பான் சம்பந்தப்படவில்லை.
பிரதமரும் அக்கூட்டணியின் தலைவருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதனை உறுதிபடுத்தியுள்ளார்.
அப்பேரணி குறித்து கருத்துரைக்குமாறு செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதை நீங்கள் தேசிய முன்னணித் தலைவரிடம் தான் கேட்க வேண்டுமென பிரதமர் சொன்னார்.
தேசிய முன்னணித் தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி, ஜனவரி 6 பேரணியில் அம்னோ பங்கேற்குமென்பதை நேற்று உறுதிபடுத்தியிருந்தார்.
அம்னோ, பாஸ் கட்சி உறுப்பினர்கள் சுமார் 200 பேருந்துகளில் அன்றைய தினம் புத்ராஜெயாவுக்குப் படையெடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.
நஜீப்பின் தீவிர ஆதரவாளரான ம.இ.காவின் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களும் அதில் பங்கேற்கவிருப்பதாக, அதன் தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் நேற்று
உறுதிபடுத்தியிருந்தார்.
PPP எனப்படும் மக்கள் முற்போக்குக் கட்சியின் பங்கேற்பை அதன் பொதுச் செயலாளர் Inder Singh Beant Singh உறுதிபடுத்தியுள்ளார்.
வீட்டுக் காவல் தொடர்பான கூடுதல் உத்தரவு குறித்து அந்த முன்னாள் பிரதமர் செய்துள்ள மேல்முறையீடு அன்றுதான் செவிமெடுக்கப்படுகிறது.
SRC வழக்கில் தனது எஞ்சிய சிறைக்காலத்தை வீட்டுக் காவலாக மாற்ற முன்னாள் பேரரசர் கூடுதல் உத்தரவுப் பிறப்பித்திருப்பதாகவும், அதனை அமுல்படுத்த அரசாங்கத்தை கட்டாயப்படுத்துமாறும்
நஜீப் செய்த விண்ணப்பத்தை, முன்னதாக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதை எதிர்த்தே அவர் மேல் முறையீட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார்.