
புத்ராஜெயா,பிப்ரவரி-21 – புத்ராஜெயா Presint 11-ல் உள்ள தேசியப் பள்ளியின் முன்புறம் நேற்று மாலை காரால் மோதப்பட்டு 8 வயது சிறுவன் படுகாயமடைந்துள்ளான்.
தலையின் பின்புறத்தில் விரிசலும், உடலின் பல்வேறு பகுதிகளில் அவன் காயம் காயமடைந்திருக்கும் நிலையில், தொடர்ந்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாலை 4.45 மணியளவில் பாதசாரிகள் பாதையிலிருந்து பள்ளியின் முன்புறம் சாலையைக் கடந்த போது, பெண்ணொருவர் ஓட்டி வந்த கார் அச்சிறுவனை மோதியது.
இதனால் காருக்கடியில் அவன் சிக்கிக் கொள்ள, தீயணைப்பு வண்டி வருவதற்குள், அங்கிருந்த பொது மக்கள் ஒன்று சேர்ந்து காரை கவிழ்த்து அவனை வெளியே மீட்டனர்.
சிறுவன் உடனடியாக புத்ராஜெயா மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டான்.
அச்சம்பவம் 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவதாக புத்ராஜெயா போலீஸ் கூறியது.