
புத்ராஜெயா, ஏப்ரல்-3- புத்ராஜெயா, பிரிசிண்ட் 11-ல் உள்ள அடுக்குமாடி வீட்டில் வழிப்பறிக் கொள்ளையன் தங்கச் சங்கிலியைப் பறித்ததில், 12 வயது சிறுமி கன்னத்தில் காயமடைந்தாள்.
இச்சம்பவம் நேற்று காலை 9.45 மணியளவில் நிகழ்ந்ததாக, புத்ராஜெயா போலீஸ் தலைவர் ஐடி ஷாம் மொஹமட் கூறினார்.
இதையடுத்து அச்சிறுமியின் தந்தை பிற்பகல் 1 மணியளவில் போலீஸில் புகார் செய்தார்.
சம்பவம் நடந்த போது தந்தை வீட்டில் இல்லை; என்றாலும், CCTV நேரலை வாயிலாக நடந்தவற்றை கண்டு விட்டார்.
தனது 12 வயது மகளுடன் சந்தே நபர் மல்லுக்கட்டுவதை தாம் CCTV நேரலையில் கண்டதாக, அவர் போலீஸிடம் சொன்னார்.
சந்தேக நபர் பச்சை நிற ஜேக்கட், கருநிற கால்சட்டை, கருமையானத் தொப்பி, முகமூடி அணிந்திருந்ததோடு, ஒரு ரப்பர் குழாய் மற்றும் தண்ணீர் கொள்கலனையும் வைத்திருந்தான்.
பின்னர், அச்சிறுமியை நெருங்கி குளியலறை குழாயுடன் குழாயை இணைத்து கொள்கலனை நிரப்புமாறு கேட்டுள்ளான்.
சிறுமி தண்ணீர் கொள்கலனை திருப்பிக் கொடுத்த போது, அவன் அவளுடைய தலைமுடியைப் பிடித்து, கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறித்தான்.
சிறுமியாலும் அவளுடைய தாயாராலும் அந்நபரை அடையாளம் காண முடியவில்லை.
இந்நிலையில் சந்தேக நபரை போலீஸ் தேடி வருகிறது