
புத்ராஜெயா, ஜனவரி-15, புத்ராஜெயா – சைபர்ஜெயா நெடுஞ்சாலையின் 38-வது கிலோ மீட்டரில் நேற்று ஒரு சிறிய லாரி கொழுந்து விட்டு எரிந்த நிலையில் தானாக நகர்ந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
நல்லவேளையாக அப்போது சாலையில் வாகனங்கள் அதிகமில்லை.
வலப்புறச் சாலையில் தீயில் எரிந்துகொண்டே வேகமாகச் சென்ற லாரி, ஒரு கட்டத்தில் இடது பக்கத்தில் நுழைந்து அதுவாக போய் ஒரு மூலையில் நின்றது.
அங்கு அது தொடர்ந்து கொழுந்து விட்டு எரியும் காட்சிகளை, இடப்பக்கத்தில் வந்துகொண்டிருந்த மற்றொரு காரிலிருந்தவர்கள் பதிவுச் செய்தனர்.
லாரியின் இயந்திரத்தில் ஏற்பட்ட அதீத வெப்பத்தால் தீப்பற்றியதாக நம்பப்படுகிறது.
இவ்வேளையில் அச்சம்பவம் குறித்து புகார் கிடைத்திருப்பதை உறுதிப்படுத்திய செப்பாங் போலீஸ், அதில் உயிர் சேதம் ஏற்படவில்லை என்றது.
இயந்திரத்திலிருந்து புகை வெளியானதை கண்ட ஓட்டுநர், லாரியை நிறுத்த முயன்றுள்ளார்; ஆனால் அதற்குள் தீ வேகமாகப் பரவியதால் அது முடியாமல் போனது.
இதையடுத்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவர் வெளியே குதித்து விட்டார்; அதில் சிராய்ப்புக் காயம் ஏற்பட்டது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.