
புத்ரா ஜெயா , ஜன 20 – இமயம் எனப்படும் புத்ரா ஜெயா இந்திய அரசு பணியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் பொங்கல் வைக்கும் வைபவம் இன்று காலை Presint 20 இல் உள்ள தேவி ஸ்ரீ லலிதாம்பிகை ஆலயத்தில் நடைபெற்றது. தொழில்முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத்துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்தி கந்தசாமி இந்த நிகழ்வுக்கு சிறப்பு வருகை புரிந்தார். புத்ரா ஜெயாவிலுள்ள பல்வேறு அமைச்சுகளின் அலுவலகங்களில் பணிபுரியும் இந்திய பணியாளர்கள் பெரும்பாலோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். 2012 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இமயத்தில் 400க்கும் மேற்பட்டோர் உறுப்பினராக இருப்பதாகவும் கடந்த 10 ஆண்டு காலமாக பொங்கல் வைக்கும் வைபவம் சிறப்பான முறையில் நடைபெற்று வருவதாக இமயத்தின் தலைவர் முரளிதரன் தெரிவித்தார்.
புத்ரா ஜெயாவிலுள்ள இந்திய பணியாளர்கள் தங்ளுக்கிடையே ஒரு இயக்கத்தை அமைத்து ஒற்றுமை உணர்வோடு பொங்கல் நிகழ்வை ஏற்பாடு செய்வது குறித்து செனட்டர் சரஸ்வதி தமது மகிழ்ச்சியை தெரிவித்தார். தமது செனட்டர் பதவிக் காலம் இன்னும் மூன்று ஆண்டு காலம் இருப்பதால் இந்த கால கட்டத்திற்குள்ளாகவே புத்ரா ஜெயா தேவி ஸ்ரீலலிதாம்பிகை ஆலயத்தை முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் காண்பதற்கு தம் முழு முயற்சியில் ஈடுபடவிருப்பதாகவும் அவர் கூறினார்.