
புத்ராஜெயா, ஏப்ரல்-2 – பூச்சோங், புத்ரா ஹைய்ட்ஸ் எரிவாயுக் குழாய் வெடிப்பினால் ஏற்பட்ட தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அடையாள ஆவணங்கள் இலவசமாகவே மாற்றித் தரப்படும்.
தேசியப் பதிவிலாகாவான JPN இன்று வெளியிட்ட அறிக்கையில் அதனை உறுதிப்படுத்தியது.
அடையாள அட்டை, பிறப்புப் பத்திரம் அல்லது JPN வெளியிட்ட வேறெந்த ஆவணங்களும் தீயில் சேதமுற்றிருந்தால், அவர்கள் எவ்வித கட்டணமுமின்றி மாற்று ஆவணங்களைப் பெற முடியும்.
அதற்கு ஏதுவாக, தற்காலிக நிவாரண மையமாக இயங்கி வரும் புத்ரா ஹைய்ட்ஸ், புத்ரா மசூதி வளாகத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, MEKAR நடமாடும் பேருந்து சேவை வழங்கப்படும்.
பாதிக்கப்பட்டவர்கள், நடப்புச் சூழலில் JPN அலுவலகங்களுக்குச் செல்வது கடினம் என்பதால், அவர்களின் வசதிக்காக நாங்களே அங்கே செல்கிறோம்.
தவிர, முக்கிய ஆவணங்கள் அவர்களுக்கு விரைந்து கிடைக்கப் பெறுவது அவசியமாகும்; அப்போது தான் அடுத்து வரும் எந்தவொரு அலுவல்களையும் அவர்களால் எளிதில் மேற்கொள்ள முடியுமென JPN விளக்கியது.
இந்த சிறு முயற்சியானது, பாதிக்கப்பட்டவர்களுக்கு, இக்கட்டானச் சூழலை எதிர்கொள்வதில் சற்று உதவியாக இருக்குமென்றும் JPN நம்பிக்கைத் தெரிவித்தது.