
பூச்சோங், ஏப்ரல்-4- பூச்சோங், புத்ரா ஹைய்ட்ஸ் பகுதியில் எரிவாயுக் குழாய் வெடிப்பு ஏற்பட்ட இடத்தருகே மார்ச் 30-ஆம் தேதி நிலம் தோண்டப்பட்டுள்ளது.
சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹுசேய்ன் ஓமார் கான் இன்று அதனை உறுதிப்படுத்தினார்.
தொடக்கக் கட்ட விசாரணையில் அது கண்டறியப்பட்டுள்ளது.
என்ற போதிலும், அங்கு மண் தோண்டப்பட்டதே, ஏப்ரல் 1-ஆம் தேதி ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்திற்குக் காரணமா என்பதை உறுதிச் செய்ய, தாங்கள் மேற்கொண்டு விசாரணை நடத்த வேண்டியுள்ளதாக அவர் சொன்னார்.
இந்த புத்ரா ஹைய்ட்ஸ் நிலத்தடி எரிவாயுக் குழாய் வெடிப்புச் சம்பவத்துக்கு 3 அம்சங்கள் காரணமாக இருந்திருக்கலாம்; அவை முறையே எரிவாயு, காற்று அல்லது தீப்பொறி என டத்தோ ஸ்ரீ ஹுசேய்ன் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
இதுவரை, சம்பவத்தை நேரில் பார்த்த 56 சாட்சிகள் விசாரணைக்கு அழைக்கப்பட்டு, அவர்களின் வாக்குமூலங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.
இது போல கிடைக்கப் பெறும் ஒவ்வொரு தகவலும் விசாரணைக்கு உதவுமென்றார் அவர்.
நாட்டையே உலுக்கிய அந்த எரிவாயுக் குழாய் வெடிப்புச் சம்பவத்துக்கு, அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மண் தோண்டப்பட்ட நடவடிக்கையே காரணம் என முன்னதாக தகவல்கள் பரவியது குறிப்பிடத்தக்கது