
கோலாலம்பூர், ஏப்ரல்-3- பூச்சோங், புத்ரா ஹைய்ட்சில் எரிவாயுக் குழாய் வெடித்து ஏற்பட்ட தீ சம்பவம் தொடர்பில் வெளியிட்ட பத்திரிகை அறிக்கையை, கட்டுமானத் தொழில்துறை மேம்பாட்டுக் கழகமான CIDB மீட்டுக் கொண்டுள்ளது.
சம்பவத்தன்று வெடிப்பு ஏற்பட்ட இடத்தில் கட்டுமானப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை; அதோடு அவ்வெடிப்புக்குக் காரணமாகக் கூறப்படும் மேம்பாட்டுத் திட்டப் பணிகள் நடைபெற்றதோ, வெடிப்பிலிலிருந்து 30 மீட்டர் தொலைவில் என தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக முந்தைய அறிக்கையில் CIDB கூறியிருந்தது.
ஆனால் நேற்றிரவு வெளியிட்ட புதிய அறிக்கையில், பல்வேறு தரப்புகளை உட்படுத்தி விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுவதால், முந்தைய அறிக்கையை மீட்டுக் கொள்வதாக அது விளக்கியது.
இதனால் ஏற்பட்ட குழப்பங்களுக்காக குறிப்பாக பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக CIDB கூறியது.
இவ்விவகாரம் நெறிமுறையோடும் வெளிப்படையாகவும் கையாளப்படுவதை நாங்கள் உறுதிச் செய்வோம் என்றும் CIDB உத்தரவாதமளித்தது.
“பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் கட்டுமானத் துறை விதிமுறைகளுக்கு இணங்குவதில் நாங்கள் சமரசம் செய்ய மாட்டோம்”
“ஒருவேளை விதிமீறல்கள் இருந்தது உறுதியானால் பாரபட்சம் இல்லாமல் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து தரப்பினரின் பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் நலனுக்காக தேசிய கட்டுமானத் தொழில் மிக உயர்ந்த தரத்தில் செயல்படுவதை உறுதிச் செய்வதே எங்கள் உறுதிப்பாடாகும்” என CIDB மேலும் கூறிற்று.