
காஜாங், நவ 18 – இஸ்ரேல் காஸா போர் நீடித்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு தொடர்புடைய பொருட்களை வாங்காமல் புறக்கணிக்க வேண்டும் என்ற இயக்கம் பெருமளவில் பல நாடுகளில் பரவி வருகிறது.
மலேசியாவும் அதற்கு விதிவிலக்கல்ல. ஏற்கனவே மெக்டோனல்ட்ஸ் , கே.எப்.சி போன்ற துரித உணவுகளை புறக்கணிக்க வேண்டும் என பலர் கூறிவரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக “US Pizza” உணவக உரிமையாளர், தங்களுடைய உணவகம் பற்றி கூறிய விளக்கம் மேலும் குழப்பத்தையும் ஆச்சிரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
காஜாங்கில் தாமான் பிரிமா சவுஜானாவில் “US Pizza” உணவக உரிமையாளர் முகமட் சோப்ரி அலி, தங்கள் உணவகத்தின் பெயரில் உள்ள US என்பது அமெரிக்காவை குறிக்கவில்லை என விளக்கமளித்திருக்கிறார். “US” எனபது ஆங்கிலத்தில் ‘us’ அதாவது நாம் என குறிக்கும் சொல் என கூறியிருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
‘இது ஒரு முஸ்லிம் வணிக நிறுவனம். நாங்கள் அனைவரையும் எங்கள் உணவகத்திற்கு வரவேற்கிறோம். மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்களை என்பதை ‘us’ எனும் சொல் குறிப்பதாக அவர் புதிய அர்த்தம் கூறியுள்ளார்.
ஆனால் “US Pizza” என்பது உண்மையிலேயே அமெரிக்காவின் டொனால்ட் டங்கன் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. அது மலேசியாவில் முதல் கிளை நிறுவனத்தை 1997ல் தொடங்கியது என அதன் அகப்பக்கத்தில் தெரிவித்திருக்கிறது.
தன்னுடைய வியாபாரம் பாதிக்கக்கூடாது என்பதற்காக சோப்ரி முன்னெச்சரிக்கையாக இப்படிபட்ட பதிவை வெளியிட்டிருந்தாலும் US எனும் சொல்லுக்கு அவர் கொடுத்த விளக்க ஜீரணிக்க சிரமமாக இருப்பதாக வலைத்தளவாசிகள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.