
ஷா ஆலாம், செப்டம்பர் 28 – கிளந்தான், ஜாலான் குவா மூசாங் – ஜெலி சாலையில், புலி நடமாட்டம் இருப்பதாக கூறப்படும் பகுதியில், PERHILITAN – தேசியப் பூங்கா மற்றும் வனவிலங்கு பாதுகாப்புத் துறை, ரோந்து – கண்காணிப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
கடந்த செவ்வாய்கிழமை, காலை மணி 11 வாக்கில், அச்சம்பவம் தொடர்பில் புகார் பெறப்பட்டதை, கிளந்தான் PERHILITAN இயக்குனர் முஹமட் ஹபீட் ரொஹானி உறுதிப்படுத்தினார்.
டாபோங், கம்போங் லாதா கெர்தாஸுக்கு அருகில், அந்த புலியைக் கண்டதாக, பொதுமக்களிடமிருந்து புகார்கள் பெறப்பட்டுள்ளன.
அதனை அடுத்து, நேற்று தொடங்கி சம்பந்தப்பட்ட பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ள வேளை ; சம்பந்தப்பட்ட புலியின் கால்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் முஹமட் ஹபீட் சொன்னார்.
அருகிலுள்ள காட்டில் அந்த புலி பதுங்கி இருக்கலாம் என நம்பப்படுவதால், அப்பகுதியில் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த செவ்வாய்கிழமை, ஜாலான் குவா மூசாங் – ஜெலி சாலையில் பயணித்த லோரி ஓட்டுனரும், அவரது உதவியாளரும், சாலையில் நடமாடிய பெரிய புலி ஒன்றின் காணொளியை பதிவுச் செய்து, சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.