
தாஷ்கண்ட், செப்டம்பர் 11 – கரடி, முதலை, புலி உள்ளிட்ட கொடிய அல்லது பாதுகாக்கப்பட்ட விலங்குகளை, வீட்டில் அல்லது தங்கள் கட்டுப்பட்டில் வைத்திருப்பதை தடை செய்யும், வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பான சட்ட மசோதாவில், உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் (Shavkat Mirziyoyev) கையெழுத்திட்டுள்ளார்.
உஸ்பெகிஸ்தானில் சுற்றுசூழல் மற்றும் உயிர்களின் பெருக்கத்தைப் பாதுகாக்கும் முறையில் அந்த சட்ட திருத்தம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக, அரிய அல்லது அழிவை எதிர்நோக்கியுள்ள வனவிலங்குகளைப் பாதுகாப்பதை அது நோக்கமாக கொண்டுள்ளது.
எனினும், அந்த சட்ட திருத்ததின் கீழ், பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள உயிரினங்களின் முழு பட்டியலை, உஸ்பெகிஸ்தான் அரசாங்கம் இன்னும் வெளியிடவில்லை.
புலி, முதலை, கரடி, சில வகை மீன்கள், பூச்சிகள் உட்பட ஐம்பதுக்கும் அதிகமான உயிரினங்கள் அந்த பாட்டியலில் இடம் பெற்றுள்ளதாக, இதற்கு முன், உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
அப்புதிய சட்ட திருத்தத்தின் வாயிலாக, மக்கள் இனி வன விலங்குகளை, செயற்கையான வாழ்விடங்களிலோ, சிறைப்பிடிக்கப்பட்ட நிலையிலோ வைத்திருக்க முடியாது.