புத்ராஜெயா, ஜனவரி-7, AwAS எனப்படும் தானியங்கி விழிப்புணர்வு பாதுகாப்பு முறை கேமராக்கள், நடப்பிலுள்ள நிலையான அணுகுமுறைக்குப் பதிலாக, புள்ளிக்குப் புள்ளி என்ற கண்காணிப்பு முறைக்குத் தரமுயர்த்தப்படவுள்ளன.
இப்புதிய முறையின் கீழ், தூரம் மற்றும் பயண நேரத்தைப் பயன்படுத்தி இரண்டு சோதனைச் சாவடிகளுக்கு இடையே சராசரி வேகத்தைக் கணக்கிட்டு, மேலும் விரிவான வேகக் கண்காணிப்பை அக்கேமராக்கள் வழங்கும்.
போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் அதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள AwAS கேமராக்கள், ஒற்றை மற்றும் நிலையான இடங்களில் வைக்கப்பட்டுள்ளதால், வாகனங்களின் வேகத்தை திறம்பட குறைப்பதிலோ அல்லது விபத்து அபாயங்களைக் குறைப்பதிலோ அவை ஆக்கப்பூர்வமாக செயலாற்றுவதில்லை.
“AwAS கேமராக்களைப் பார்த்தவுடன் மட்டும் ஓட்டுநர்கள் வாகனங்களை மெதுவாக ஓட்டுவது நாங்கள் தடுக்க விரும்புகிறோம்; மாறாக, குறிப்பிட்ட தூரத்திலிருந்தே அவர்கள் குறைந்த வேகத்தைக் கடைபிடிக்க வேண்டும்” என அந்தோனி லோக் கூறினார்.
உதாரணத்திற்கு, A புள்ளியிலிருந்து B புள்ளி வரையிலான பயணத்திற்கு, ஓட்டுநர் எடுத்துக் கொண்ட நேரம் கணக்கிடப்படும்; எதிர்பார்க்கப்பட்டதை விட விரைவாகவே பயணம் நிறைவடைந்தால், அவர்கள் வேகமாகச் சென்றுள்ளார்கள் எனக் கருதி பெனால்டி விதிக்கப்படுமென்றார் அவர்.
தற்சமயம், மலைப்பாங்கான பகுதிகளில் கெந்திங் சம்பாஹ் அருகேயுள்ள கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலை மற்றும் ஈப்போவில் உள்ள மேனோரா சுரங்கப் பாதை போன்ற அபாயகரமான இடங்களில் மேம்படுத்தப்பட்ட அந்த AwAS கேமராக்கள் பொருத்தப்படவிருக்கின்றன.