
புது டெல்லி, ஏப்ரல்-12- இந்தியத் தலைநகர் புது டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் புழுதிப் புயல் வீசியதால், நேற்று விமானப் பயணங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
குறைந்தது 205 விமானங்கள் தாமதமான வேளை, 50 விமானங்கள் திட்டமிடப்பட்ட இலக்கிலிருந்து திருப்பி விடப்பட்டன.
விமானங்களின் புறப்பாடு சராசரியாக ஒரு மணி நேர தாமத்தைச் சந்தித்தது.
இதனால் நூற்றுக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டு, புது டெல்லி அனைத்துலக விமான நிலையத்தில் பெரும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.
ஏர் இந்தியா, இண்டிகோ போன்ற விமான நிறுவனங்கள் தத்தம் X தளங்களில் ஆலோசனை அறிவிப்புகளை வெளியிட்ட போதும், ஏராளமான பயணிகள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த 75 வயது மூதாட்டி, 12 மணி நேரங்களுக்கும் மேலாக தாம் அங்கேயே சிக்கித் தவித்ததாக வேதனையை வெளிப்படுத்தினார்.
பலர் X தளத்தில் தங்களின் குமுறலைக் கொட்டித் தீர்த்தனர்.
நிர்வாகம் சரியில்லை; அனைத்துலகத் தரத்திலான விமான நிலையம் என்பது பெயரளவில் தான்; ஆனால் ஒரு பேருந்து நிலையத்தை விட மோசமாக இருப்பதாக புகைப்படங்களைப் பகிர்ந்து பலர் சினத்தை வெளிப்படுத்தினர்.
வெள்ளிக்கிழமை மாலை டெல்லி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வலுவான புழுதிப் புயல் வீசியதில், சாலைகள் மற்றும் கார்கள் மீது மரங்கள் விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
கட்டுமானத்திலிருந்த கட்டடம் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்தும் உள்ளார்.