கோலாலம்பூர், மே 5 – சிலாங்கூர் பூச்சோங்கில் செயல்பட்ட நான்கு பொழுது போக்கு விடுதிகள் மற்றும் மனமகிழ் சேவை மையத்தில் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை நடவடிக்கையில் 46 பெண்கள் உட்பட 65 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.
20 முதல் 69 வயதுடைய அவர்கள் கைது செய்யப்பட்டதை கோலாலம்பூர் குடிநுழைவுத்துறையின் நடவடிக்கைக்கான துணை தலைமை இயக்குனர்
Jafri Embok Taha உறுதிப்படுத்தினார். அவர்களில் 44 வியாட்னாமியர்களுடன்
பதினோரு வங்காளதேசிகளும் அடங்குவர். உள்நாட்டைச் சேர்ந்த மூன்று ஆடவர்களுடன் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டதாக Jafri Embok கூறினார்.
அதிகாலை வேளையில் மேற்கொள்ளப்பட்ட அந்த சோதனை நடவடிக்கையில் GRO சேவையை வழங்கிய பல வெளிநாட்டு பெண்களும் கைது செய்யப்பட்டனர். அந்த பொழுது போக்கு விடுதிகளிலும் மனமகிழ் மன்றத்திலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக இருந்ததோடு அமலாக்க அதிகாரிகளின் வருகையை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும்வகையில் அங்கு ரகசிய கண்காணிப்பு கேமரா வசதிகளும் இருந்ததாக கூறப்பட்டது. எனினும் அந்த பொழுதுபோக்கு விடுதிகளில் நள்ளிரவு 12 மணி அளவில் நுழைந்த குடிநுழைவு அதிகாரிகள் அதிகாலை 3 மணிவரை சோதனை நடத்தினர்.