திரங்கானு, அக்டோபர்-13,
தன்னைப் போலவே பராமரிக்க ஆளின்றி கிடந்த பூனைக்குட்டியுடன் விளையாடி வைரலான தெரு நாயை, திரங்கானு ஊராட்சி மன்றம் சுட்டுக் கொன்றதாக வெளியான செய்தியால் வலைத்தளவாசிகள் கடும் சினமடைந்துள்ளனர்.
கோப்பி (kopi) எனச் செல்லமாக அழைக்கப்பட்ட அந்நாயை, ஊராட்சி மன்றத்தினர் அக்டோபர் 6-ஆம் தேதி சுட்டுக் கொன்றதாகக் குடியிருப்பாளர்களை மேற்கோள் காட்டி My Forever Doggo என்ற Instagram பக்கத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
அதுவும் அனைத்துலக விலங்குகள் தினம் அனுசரிக்கப்பட்ட இரண்டு நாட்களில், அந்த வாயில்லா ஜீவன் கொல்லப்பட்டுள்ளது.
செய்தியைப் பார்த்த வலைத்தளவாசிகள் ஊராட்சி மன்றத்தின் மீது கோபத்தைக் கொட்டித் தீர்த்து வருகின்றனர்.
நாய் அதன் பாட்டுக்குத் தெருவில் சுற்றித் திரிந்தது; அதனால் யாருக்கும் தீங்கில்லாத போது அதனைக் கொல்ல உங்களுக்கு எப்படி மனம் வந்தது எனப் பலர் கேட்கின்றனர்.
தெருநாய்களைக் கொல்வது குற்றம்; சம்பந்தப்பட்டோரை நீதியின் முன் நிறுத்துங்கள் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
பூனைக்குட்டியுடன் அந்நாய் வாஞ்சையோடு விளையாடிய வீடியோ வைரலாகி, பலரையும் நெகிழ வைத்த நிலையில், அது சுட்டுக் கொல்லப்பட்டச் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.