புத்ராஜெயா, மே 17 – ஜோகூர், பெங்கராங்கில், வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு, பத்து லட்சம் ரிங்கிட்டுக்கும் அதிகமான சம்பள பாக்கியை இன்னும் செலுத்தத் தவறிய நிறுவனத்திற்கு எதிராக மொத்தம் 10 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளன.
அதில் நான்கு விசாரணை அறிக்கைகள் தொடர்பில் வழக்கு தொடர அனுமதி கிடைத்துள்ள வேளை ; எஞ்சியவை, மேல் நடவடிக்கை தொடர்பான உத்தரவுக்காக காத்திருப்பதாக, மனிதவள அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது.
அதே சமயம், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின், வெளிநாட்டு தொழிலாளர்களை பணி அமர்த்தும் அனுமதியும் இரத்து செய்யப்பட்டுள்ளதோடு, அந்நிறுவனம் கறுப்பு பட்டியல் இடப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, நாட்டிற்குள் சட்டப்பூர்வமாக தருவிக்கப்பட்ட 733 வங்காளதேச தொழிலாளர்களுக்கு வேலை வழங்கத் தவறிய சம்பவம் தொடர்பில், தீபகற்ப மலேசியா தொழிலாளர் துறை மூலம் மனிதவள அமைச்சு விசாரணை மேற்கொள்வதாக செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.
அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களை உட்படுத்திய வழக்கு என்பதால், அவ்வழக்கு விசாரணை வழக்கம் போல தொழிலாளர் நீதிமன்றத்தில் நடத்தப்படாமல், கடந்த பிப்ரவரி ஐந்தாம் தேதி, பெங்கராங் பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.
வங்காளதேச தூதரக அதிகாரிகளும் அதனை நேரடியாக பார்வையிட்டனர்.
அந்த வழக்கு விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பத்து லட்சத்து 35 ஆயிரத்து 557 ரிங்கிட் 50 சென்னை ஊதிய நிலுவைத் தொகையை வழங்க சம்பந்தப்பட்ட நிறுவனம் ஒப்புக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.