புதுடெல்லி, ஆகஸ்ட்-15 – இந்தியா கர்நாடகாவில் ஸ்கூட்டரில் சென்ற பலே திருடனைத் தனியாகத் துரத்திச் சென்று பிடித்த போலீஸ்காரருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
பெங்களூருவில் போக்குவரத்து போலீஸ் நிலையமொன்றின் அருகே நிகழ்ந்த அப்பரபரப்பான அச்சம்பவம் CCTV கேமராவில் பதிவாகி வைரலாகியுள்ளது.
ஸ்கூட்டரில் வந்த குற்றவாளி சாலை சமிக்கை விளக்குப் பகுதியை நெருங்கியதாக தகவல் கிடைத்த கையோடு, சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் ஓடிச் சென்று அவனது பின்னங்காலை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.
போலீஸ்காரரின் பிடியிலிருந்து விலக அத்திருடன் ஸ்கூட்டரை வேகமாகச் செலுத்தியும், சுற்றி சுற்றி வளைத்துப் பார்த்தும் அவர் விடுவதாக இல்லை.
உயிரைப் பணயம் வைத்து அவனைப் பிடித்தே தீருவதென அவர் உறுதியாக இருந்து விட்டார்.
திருடன் ஒரு கட்டத்தில் போலீஸ்காரரை மோதப் பார்த்தான்.
ஆனால் அதற்குள் மற்ற போலீஸ்காரர்களும் பொது மக்களும் தலையிட்டு அவரைக் காப்பாற்றி விட்டனர்.
திருடனும் ஒருவழியாக அகப்பட்டான்.
அத்திருடன் 40 குற்றப்பதிவுகளைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.