
ஜொகூர் பாரு, நவம்பர் 6 – ஈராண்டுகளுக்கு முன், Socso – சமூக பாதுகாப்பு அமைப்பிடம் போலி ஆவணங்களை ஒப்படைத்து, ஏமாற்றியதாக, தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றின் உரிமையாளருக்கு எதிராக, இன்று ஜொகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
30 வயது கே.சிவ லிங்கா எனும் அந்நபர், பெஞ்ஜானா (Penjana) – தொழிலாளர் ஊக்கத் திட்டத்தின் கீழ், ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 760 ரிங்கிட் உதவித் தொகையை பெறுவதற்காக, அச்செயலை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
எனினும், தமக்கு எதிரான அனைத்து ஆறு குற்றச்சாட்டுகளையும் மறுத்து, சிவ லிங்கா இன்று விசாரணை கோரினார்.
தம்மிடம் வேலை செய்யாத எண்மரின் விவரங்கள் அடங்கிய பட்டியலை ஒப்படைத்து, ஜொகூர் பாரு Socso அலுவலக பணியாளரை ஏமாற்றியதாக சிவ லிங்காவிற்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
2021-ஆம் ஆண்டு, ஜூன் 30-ஆம் தேதி, அவர் அக்குற்றத்தை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் ஐந்தாண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
15 ஆயிரம் உத்தரவாதத் தொகையிலும், தனிநபர் உத்தரவாதத்தின் பேரிலும் சிவ லிங்காவை இன்று விடுவிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இவ்வழக்கு விசாரணை, டிசம்பர் ஆறாம் தேதி செவிமடுக்கப்படும்.