பெட்டாலிங் ஜெயா, ஆக 6 – பெட்டாலிங் ஜெயா, Taman Paramount-ட்டில் உள்ள அடுக்கு மாடி வீட்டின் படுக்கை அறையில் பெண் ஒருவர் தீயில் கருகி மாண்டுக் கிடந்தார். இந்த விவகாரம் தொடர்பில் நேற்று மாலை மணி 5.42 அளவில் தாங்கள் அவசர அழைப்பை பெற்றதாக பெட்டாலிங் ஜெயா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இரண்டாவது மண்டலப் பிரிவுக்கான தலைவர் வான் சரிமான் வான் சாலே ( Wan Syariman Wan Salleh ) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
5 மாடிகளைக் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியில் முதல் மாடியிலுள்ள வீட்டில் நிகழ்ந்த தீவிபத்தில் மரணம் அடைந்த பெண் தனது உடலில் 60 விழுக்காடு தீக்காயத்திற்கு உள்ளானார். சம்பவம் நிகழ்ந்த வீட்டிற்கு விரைந்த டமன்சாரா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தை சேர்ந்த 10 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அந்த தீவிபத்தில் அடுக்கு மாடி வீட்டின் கட்டிட அமைப்பில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை. அந்த வீட்டின் அறையில் இருந்த கட்டில் மற்றும் மெத்தை மட்டுமே தீயில் பாதிக்கப்பட்டுள்ளது. தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வான் சரிமான் வான் சாலே வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.