கோலாலம்பூர், அக்டோபர்-10 – கோலாலம்பூர் பெட்டாலிங் ஸ்டிரீட்டில் வெறும் 60 ரிங்கிட் கட்டணத்தில் இந்தோனீசிய விலைமாதர்களின் சேவையை வழங்கி வந்த விபச்சார விடுதியில், அதிகாரிகள் நேற்று அதிரடிச் சோதனை நடத்தினர்.
அதன் போது 21 முதல் 38 வயதிலான 12 இந்தோனீசியப் பெண்கள் கைதானதாக குடிநுழைவுத் துறை கூறியது.
மிகவும் அசுத்தமாக துர்நாற்றம் வீசிய அவ்வீடு, சிறு சிறு அறைகளாக பிரிக்கப்பட்டு அங்கு கட்டில்கள் போடப்பட்டுள்ளதும் சோதனையில் கண்டறியப்பட்டது.
குடிநுழைவுத் துறை அலுவலகத்துக்கு வருமாறு 3 உள்ளூர் வாடிக்கையாளர்களுக்கு நோட்டீஸ் அழைப்பாணை கொடுக்கப்பட்ட வேளை, நேப்பாள மற்றும் இந்தியப் பிரஜைகள் இருவருக்கு எதிராக குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அங்கு கள்ளக் குடியேறிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வந்த 4 உள்ளூர் ஆடவர்களும் கைதாகினர்.
ஓராண்டாக இயங்கி வந்த அந்த சிவப்பு விளக்குப் பகுதியில் walk-in முறையில் வாடிக்கையாளர் வந்துபோகின்றனர்.
அதிகாரிகள் சோதனைக்கு வருவதை கண்காணிக்க, அவ்விடுதியின் பின்புற கதவில் CCTV கேமரா பொருத்தப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது.