கோலாலம்பூர், ஏப்ரல் 17 – மலேசியா தனது நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க, இவ்வாண்டு இறுதிக்குள் பெட்ரோல் மானியங்களைக் குறைக்கும் என, பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லி கூறியுள்ளார்.
நாட்டிலுள்ள, வரிய நிலை மக்களுக்கு உதவும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும் சரியான பாதையில், தற்போது அரசாங்கம் இருப்பதையும், ரபிசி சுட்டிக் காட்டியுள்ளார்.
எனினும், பெட்ரோல் உதவித் தொகை குறைப்பு நடைமுறைக்கு வருவதற்கு முன்பே, அதனால் ஏற்படக்கூடிய பணவீக்க அதிகரிப்பு விளைவுகளை கையாளும் அணுகுமுறைகளை அரசாங்கம் ஆராய வேண்டுமெனவும் ரபிசி குறிப்பிட்டார்.
RON95 எரிபொருளுக்கான உதவித் தொகை அல்லது மானியத்தை படிப்படியாக நிறுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது, RON95 நாட்டில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் மற்றும் சிக்கனமான பெட்ரோல் ஆகும்,
RON95 பெட்ரோல் உதவித் தொகைக்காக, கடந்தாண்டு அரசாங்கம் எட்டாயிரத்து 100 கோடி ரிங்கிட் நிதியை ஒதுக்கியது.
தற்சமயம் அமலில் இருக்கும் RON95 பெட்ரோல் உதவித் தொகை திட்டத்தை, T20 எனப்படும் வசதியான வர்க்கத்தினரே அதிகம் பயன்படுத்துகின்றனர். அதனால், அதற்கு பதிலாக புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என கடந்தாண்டு ரபிசி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.