
கோலாலம்பூர், நவம்பர் 8 – பெண்களுக்காக பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டிருக்கும் MRT “கோச்சிலிருந்து” வெளியேறுமாறு பணிவாகக் கேட்ட பெண்ணை, திட்டி தீர்க்கும் ஆடவன் ஒருவரின் காணொளி வைரலாகி, இணையவாசிகளின் சினத்தை தூண்டியுள்ளது.
அந்த 41 வினாடி காணொளி, @itsrafaaa டிக் டொக் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள வேளை ; ஆடவன் ஒருவன் கைப்பேசி உரையாடலில் மூழ்கி இருப்பதை அதில் காண முடிகிறது.
அந்த காணொளியை பதிவுச் செய்த பெண், மகளிர் பகுதியை காலி செய்யுமாறு அவ்வாடவனை பணிவாக கோரும் குரல், பின்னணியில் ஒலிக்கிறது.
எனினும், அதற்கு “வாயை மூடு” என அவ்வாடவன் மிகவும் முரட்டுத்தனமாக பதிலளிக்கிறான்.
பலமுறை கேட்டுக் கொள்ளப்பட்ட போது, அவன் அதனை பொருட்படுத்தவில்லை என்பதோடு, கைப்பேசி உரையாடலை தொடர்வதை போல, மிகவும் அலட்சியமாக நடந்து கொள்கிறான்.
ஆனால், அவ்வாடவன், உண்மையில் கைப்பேசியில் பேசவில்லை. மாறாக, தாம் ஒளிப்பதிவுச் செய்யப்படுகிறோம் என்பதை அறிந்து அவன் கைப்பேசியில் பேசுவதை போல பாசாங்கு செய்தான் என, அந்த காணொளிக்கு கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது
சம்பவத்தின் போது, MRT பாதுகாவலர் யாரும் அங்கு இல்லை என்பதால், தம்மால் உதவிக் கோர முடியவில்லை என அப்பெண் பதிவிட்டுள்ளதை தொடர்ந்து, அச்சம்பவத்திற்காக, RapidKL நிறுவனம் உடனடியாக மன்னிப்புக் கோரியுள்ளது.
அதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழ்ந்தால், உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் RapidKL உத்தரவாதம் அளித்துள்ளது.
அச்சம்பவம் தொடர்பான காணொளியை இதுவரை எட்டு லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ள வேளை ; பலர் கடும் கண்டனம் தெரிவித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.