
கான்பெரா, ஆகஸ்ட்டு 29 – ஆஸ்திரேலியாவில், பெண் ஒருவரின் மூளையிலிருந்து, உயிருள்ள ஒட்டுண்ணி புழு ஒன்று அறுவை சிகிச்சை வாயிலாக அகற்றப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக மருத்துவ வரலாற்றில், அதுபோன்றதொரு விநோத சம்பவம் அடையாளம் காணப்பட்டிருப்பது, இதுவே முதல் முறை என்கிறனர் ஆராய்ச்சியாளர்கள்.
அந்த 64 வயது பெண்ணின் மூளையிலிருந்து, உயிருடன் நெளிந்து கொண்டிருந்த எட்டு செண்டிமீட்டர் நீளமுள்ள ஓபிடாஸ்காரிஸ் (Ophidascaris) வகை புழு அறுவை சிகிச்சை வாயிலாக அகற்றப்பட்டது.
பொதுவாக மலைப்பாம்புகளில் தான் அவ்வகை புழு காணப்படும் என கூறப்படுகிறது.
கடந்தாண்டு, திடீரென ஞாபக மறதி மற்றும் மனச்சோர்வுக்கு இலக்கான அப்பெண்ணை பரிசோதனை செய்த நரம்பியல் மருத்துவர்கள், அவரது மூளையின் வலது முன் மடல் விநோதமாக தோற்றமளிப்பதை கண்டுப்பிடித்தனர்.
மலைப்பாம்பு ஊர்ந்து சென்ற காய்கறி அல்லது கீரைகளை தொட்ட போது அல்லது உண்டது வாயிலாக, அப்பெண் பாதிக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
தற்சமயம், தொற்று நோய் மற்றும் மூளை நிபுணர்களின் கண்காணிப்பில் இருக்கும் அப்பெண்ணின் உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.