கோலாலம்பூர், செப்டம்பர் -9 – அமானா இக்தியார் மலேசியா நிறுவனத்தின் கீழ் தொடங்கப்பட்ட ‘பெண்’ (P.E.N.N) திட்டத்தின் கீழ் இதுவரை 1,250 இந்தியப் பெண் தொழில்முனைவர்கள் பயன் பெற்றுள்ளனர்.
அவர்களுக்குக் கடந்த வாரம் வரை வழங்கப்பட்ட மொத்த தொகை 14Million ரிங்கிட் என, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஏப்ரலில் தொடங்கப்பட்ட ‘பெண்’ திட்டத்திற்கு மொத்தமாக 50Million ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் 20Million ரிங்கிட் மட்டுமே அத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
ஆனால் மடானி அரசாங்கம் கூடுதலாக 50Million ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளதாக டத்தோ ரமணன் சொன்னார்.
இந்த ‘பெண்’ திட்டத்தையும் சேர்த்து கடந்த 4 மாதங்களில் மட்டும் இந்தியச் சமூகத்துக்காக அரசாங்கம் 130Million ரிங்கிட் கூடுதல் ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது.
Tekun Nasional-லின் கீழ் SPUMI GOES BIG திட்டம், Bank Rakyat கீழ் BRIEF-i இந்தியத் தொழில்முனைவோர் திட்டம் உள்ளிட்டவையும் அவற்றில் அடங்கும் என்றார் அவர்.
ஜூன் மாதம் தொடங்கப்பட்ட BRIEF-i திட்டத்தின் கீழ் கடந்த வாரம் வரை 322 தொழில்முனைவோருக்கு 27Million ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளது.
நிதி ஒதுக்கப்படுவது பெரிதல்ல; அது சரியாக சென்றடைகிறதா, அரசாங்கத்தின் நோக்கம் அடையப்படுகிறதா என்பதும் முக்கியம்.
ஆகவே, தாமே அவற்றை நேரடியாகக் கண்காணித்து வருவதாக சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
மேற்கண்ட உதவித் திட்டங்கள் வாயிலாக இந்திய தொழில்முனைவோர் கணிசமான வளர்ச்சியை அடைந்து வருகின்றனர்.
இதனால் இந்தியச் சமூகத்தின் பொருளாதாரத்தை உயர்த்த, அரசாங்கம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருமென்றார் அவர்.