
கோலாலம்பூர், ஏப்ரல்-4- கோலாலம்பூரில் மார்ச் 28-ஆம் தேதியிலிருந்து தனியார் பல்கலைக்கழக விரிவுரையாளரான 52 வயது மாது ஒருவர் காணாமல் போயிருக்கின்றார்.
சம்பவத்தன்று காலை 8.30 மணிக்கு கணவரால் வேலையிடத்தில் இறக்கி விடப்பட்ட ஹஸ்லினா அப்துல்லா இதுவரை வீடு திரும்பவில்லை.
தாயைத் தேடுவதிலேயே தங்களின் நோன்புப் பெருநாள் முடிந்து விட்டதாக, ஹஸ்லினாவின் 30 வயது மகன் மொஹமட் சுல்ஜவாலில் இக்ராம் சோகத்துடன் கூறினார்.
வழக்கம் போல் அன்றைய தினம் மாலை 4 மணிக்கு செந்தூல் LRT நிலையத்தில் கணவருக்காக ஹஸ்லினா காத்திருந்திருக்க வேண்டும்; ஆனால் நெடுநேரமாகியும் அவர் வரவில்லை.
கைப்பேசிக்கு அழைத்தாலும் பதிலில்லை, வாட்சப்பும் போய் சேரவில்லை; இதனால் கணவரும் இளைய மகளும் கலவரமடைந்தனர்.
LRT முழுவதும் தேடி விட்டி பின்னர் அவர் வேலை செய்யும் பல்கலைக்கழகத்திலும் அதன் நிர்வாகத்தின் அனுமதியுடன் ஒவ்வொரு மாடியாக குடும்பதே தேடியுள்ளது.
எதுவுமே பலனளிக்காமல் போகவே கடைசியாக செந்தூல் போலீஸ் நிலையத்தில் அவர்கள் புகார் செய்தனர்.
இரத்தத்தில் தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டவரான தனது தாய், சில சமயங்களில் மனச்சோர்வுடனும் முக இறுக்கத்துடனும் இருப்பார் என்பதால், அவரைப் பற்றி குடும்பத்தினர் மிகவும் கவலைப்படுவதாக மகன் சொன்னார்.
அவர் வழக்கமாக சிகிச்சைப் பெறும் மருத்துவமனைகளிலும் தேடி விட்டோம்; ஆனால் எங்கும் காணவில்லை.
எனவே தனது தாயைக் கண்டுபிடிக்க உதவுமாறு அவர் பொது மக்களைக் கேட்டுக் கொண்டார்.
காணாமல் போன அன்று ஹஸ்லினா கருப்பு நிறை உடையில் கருப்பு தூடுங் அணிந்திருந்ததாகவும் அடையாளம் கூறப்பட்டது