
மலாக்கா கூடைப்பந்து பயிற்றுனர் கோரிய மன்னிப்பை, பாதிக்கப்பட்ட இரு விளையாட்டாளர்களும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஜொகூர், கோத்தா திங்கியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிக்கு பின்னர், சம்பந்தப்பட்ட பயிற்றுனர் பாதிக்கப்பட்டவர்களிடம் உடனடியாக மன்னிப்புக் கோரியதாக, மலாக்கா இளைஞர், விளையாட்டு மற்றும் அரசாங்க சார்பற்ற அமைப்புகளின் குழு தலைவர் வி.பி சண்முகம் தெரிவித்தார். ஆரம்ப பள்ளி ஆசிரியருமான அந்த பயிற்றுனர், ஆரம்ப பள்ளி தொடங்கி சம்பந்தப்பட்ட விளையாட்டாளர்களுக்கு பயிற்சி அளித்து வருவதாகவும், அவரை இன்று வரை தங்கள் தந்தையை போலவே விளையாட்டாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளதையும், சண்முகம் சுட்டிக் காட்டினார். அதோடு, வேலையில் மிகவும் தீவிரமான அந்த பயிற்றுனர் மாணவர்களின் மரியாதைக்குரிய ஆசிரியர் என்பதால், சம்பந்தப்பட்ட பெற்றோர்களும் அவ்விவகாரத்தை பெரிதாக்க எண்ணம் கொண்டிருக்கவில்லை என சண்முகம் குறிப்பிட்டார். பயிற்றுனர் ஒருவர், விளையாட்டாளர்களை அறையும் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டதை அடுத்து, அவ்விவகாரம் பல்வேறு விமர்சனங்களை பெற்றது.