
பத்து காஜா, ஜன 19 – பத்துகாஜா பெம்பான் நிலத் திட்டத்தில் புந்தோங்கில் புறம்போக்கு நிலத்தில் வசித்து வந்தவர்களில் முதல் கட்டமாக 150 நபர்களைக் குடியேற்ற நில அடையாளம் காட்டப்பட்டது. கடந்த 40 ஆண்டுகளுக்கு பின்னர் புந்தோங் புறம் போக்கு நிலத்தில் வசித்து வந்த ஒரு பகுதியினர்களுக்கு நிரந்த இடம் வழங்க ஒரு முடிவுக் காணப்பட்டது. அதன் அடிப்படையில் முன்னதாக அவர்களில் முதல் கட்டமாக 150 நபர்களுக்கு லாட் வழங்கப்பட்டது .
அந்த நிலத்தை அடையாளம் காட்டும் நிகழ்வு பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஏ. சிவநேசன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புந்தோங்கில் புறம்போக்கு நிலத்தில் வசித்து வந்தவர்களுக்கு இந்த நிலத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. இன்னும் எஞ்சியுள்ள சுமார் 400 குடும்பங்களுக்கு இந்த பகுதியில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலத்தில் நிலம் அல்லது குறைந்த விலையில் வீடுகளை நிர்மாணித்து வழங்குவதா என்று மாநில வீடமைப்பு மற்றும் ஊராட்சி் துறைக்கு பொறுப்பேற்றுள்ள ஆட்சிக் குழு உறுப்பினர் சந்திரா இங்கிடம் கலந்துப் பேசப்படும் என்றார்.
பெம்பானின் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தை சீர் செய்ய முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் வெ. 50 லட்சம் வழங்கியுள்ளதையும் நினைவுக் கூர்ந்தார்.பேரா மாநிலத்தில் இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வுக்காண முடிந்த வரையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.