
ஓட்டுமொத்தமாக மலாய்க்காரர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் கூட்டணி எனும் தோற்றத்தை உடைக்கும் வகையில் பெரிக்காத்தான் நேஷனல் இந்தியர்களுக்கான சிறப்பு செயற்குழுவை உருவாக்க உள்ளது.
அதன் தலைவராக நாடாளுமன்ற எதிர்கட்சிச் தலைவர் டத்தோ ஶ்ரீ ஹம்சா சைனுடினும் துணைத் தலைவராக அண்மையில் ம.இ.கா-விலிருந்து வெளியேறிய சிலாங்கூர் இளைஞர் பிரிவு முன்னாள் தலைவர் புனிதனும் பொறுப்பேற்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரம் வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான மேல்மட்டச் சந்திப்புகள் சில முறை நடந்துவிட்ட நிலையில்
நாளை நடைப்பெறவுள்ள பெரிக்காத்தான் நேஷனல் உச்சமன்ற கூட்டத்திற்குப் பிறகு இது குறித்த அறிவிப்புகளை டான் ஶ்ரீ முஹிடின் யாசின் செய்யக்கூடும் என அறியப்படுகிறது.
இந்த சிறப்பு செயற்குழு முன்பு அரசாங்கத்தால்
அமைக்கப்பட்ட சிறப்பு அமைச்சரவை குழுவைப் போன்று இந்தியர்களின் தேவைகள், பிரச்சனைகள், தீர்வுகள் பற்றி கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கும். தீபகற்ப மலேசியாவில் உள்ள அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் இந்த செயற்குழு விரிவாக்கம் செய்யப்பட்டு பின்பு இந்தியர்களுக்கான ஓர் அரசியல் கட்சி உருவாக்கப்படும் எனவும் அவ்வட்டாரம் தெரிவித்தது.
வருகின்ற 6 மாநிலத் தேர்தல்களில் குறிப்பாக கெடா, பினாங்கு,சிலாங்கூர், நெகிரி செம்பிலானில் இந்தியர்களின் வாக்கு யார் வெற்றியாளர் என்பதை நிர்ணயிக்க கூடிய சக்தி கொண்டதாக உள்ளது. இந்தியர்கள் பல தொகுதிகளில் 10 முதல் 35 விழுக்காடு வரை உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் ஒற்றுமை அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள பாக்காத்தான் ஹராபான்- பாரிசான் நேஷனல் கூட்டணிக்கு ஆதரவாக இருந்தாலும் அவர்களில் 10-15 விழுக்காட்டினரின் ஆதரவு பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு திசை மாறினால் பல தொகுதிகளில் அவர்களின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும். இதனை கருத்தில் கொண்டும் அடுத்த 16-வது பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாகவும் இந்தியர்களின் நலனில் தனி அக்கறை செலுத்தும் ஓர் பிரத்தியேக செயற்குழு இப்போது அமைக்கப்படுவதாக அவ்வட்டாரம் தெரிவித்தது.
அச்செயற்குழுவில் அரசியல்வாதிகள் மட்டுமின்றி சமூக பிரமுகர்கள், அரசாங்கச் சார்பற்ற அமைப்புகள், வணிகர்கள், ஊடகத்தினர் போன்றோரும் இடம்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.