
சென்னை, ஜன 25 – லங்காவியில் பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின்போது விபத்துக்குள்ளான நடிகர் விஜய் ஆண்டனியின் உடல் நிலை குறித்து, பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், முதல் முறையாக தமது உடல் நிலை குறித்து அந்த நடிகரே ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி இருக்கின்றார்.
தான் பெரிய அறுவை சிகிச்சை ஒன்றை மேற்கொண்டிருப்பதாகவும், தாடை மற்றும் மூக்கில் ஏற்பட்ட பலமான காயத்தில் இருந்து குணமடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
விரைவில் உங்களுடன் பேசுவேன். உங்கள் ஆறுதல் வார்த்தைக்காக நன்றி என கூறியதோடு, நன்றாக உள்ளேன் என குறிப்பிட்டு கைவிரலை உயர்த்திக் காட்டி புகைப்படத்தையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
அந்த புகைப்படம் அவர் மருத்துவமனை படுக்கையில் இருந்தவாறு எடுக்கப்பட்டதாக நம்ப்படுகிறது.
கடந்த ஜனவரி 16-ஆம் தேதி லங்காவியில் , தண்ணீரில்
ஆக்ஷன் காட்சியை படமெடுத்து கொண்டிருந்தபோது , விஜய் ஆண்டனி செலுத்திய Jet Ski விபத்துக்குள்ளாகி அவரது முகத்தில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டது.