ஷா அலாம் , ஆக 5 – ஷா அலாம், தாமான் ஸ்ரீ மூடாவில் பெரிய அளவிலான வெள்ளப் பேரிடர் அபாயத்தை குறைப்பதற்காக மூன்று யூனிட் நீர் இறைப்பு இயந்திர பம்ப் பொருத்தப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் பொருத்தத் தொடங்கிய 7.1 மில்லியன் ரிங்கிட் செலவிலான அந்த பம்ப் இயந்திரம் இதற்கு முன் இருந்ததைவிட ஐந்து மடங்கு வேகத்தில் வெள்ள நீரை வெளியேற்றும் ஆற்றலை கொண்டுள்ளது.
தாமான் ஸ்ரீ மூடா தற்போது தாழ்வான பகுதியாக இருப்பதால் கடும் மழையின்போது அதிகமான நீரோட்டத்தை எதிர்நோக்குகிறது. இதனை கருத்திற்கொண்டு மாநில அளவிலான வெள்ள தடுப்பு நடவடிக்கையாக வெள்ள நீரை விரைந்து அகற்றுவற்கான புதிய நீர் இறைப்பு இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளதாக சிலாங்கூர் அடிப்படை வசதி மற்றும் விவாசாயத்துறைக்கு பொறுப்பு வகிக்கும் ஆட்சிக்குழு உறுப்பினர் பொறியியலாளர் இஷாம் ஹாசிம் ( Izham Hashim ) தெரிவித்தார்.
அந்த நீர் இறைப்பு இயந்திர பம்ப் மிகவும் விரைவாக செயல்படுவதுடன் அதில் குப்பைகள் சிக்கிக்கொள்ளாமல் நீண்ட கால அடிப்படையில் செயல்படுவதற்கு பொருத்தமான ஒன்றாக இருப்பதாக அவர் கூறினார்.
இந்த புதிய நீர் இறைப்பு இயந்திர பம்ப் பொருத்தப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இத்தகவலை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் கோத்தா ராஜா நாடாளுமன்ற உறுப்பினரும் விவசாய மற்றும் உணவு உத்தரவாத அமைச்சருமான முகமட் ஷாபுவும் கலந்துகொண்டார். கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் , ஷா அலாம், செக்சன் 25 இல் உள்ள தாமான் ஸ்ரீ மூடா கடுமையான வெள்ளத்தில் பாதிக்கப்பட்டது.