லீமா, ஏப்ரல் 30 – லத்தின் அமெரிக்க நாடான பெருவில் பயணிகள் பேருந்து 300 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்ததில், 25 பேர் உயிரிழந்தனர்.
Celendin மாகாணத்தில் ஞாயிற்றுக் கிழமை இரவு முக்கிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த அவ்விபத்தில் மேலும் 13 பேர் காயமடைந்தனர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன; எனினும் ஆழமான பள்ளம் என்பதால் சம்பவ இடத்தை அடைவதில் மீட்புப் படையினர் சிரமத்தை எதிர்நோக்குவதாகக் கூறப்படுகிறது.
பள்ளத்தில் விழுந்த பேருந்து ஆற்றில் ஒதுங்கியதால், பயணிகளில் சிலர் புரண்டோடிய நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
பேருந்து ஓட்டுநர் உள்ளிட்ட உயிர் தப்பியவர்களில் பெரும்பாலோர் கடும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மாநிலங்களுக்கு இடையிலான அப்பேருந்தில் சம்பவத்தின் போது 50 பயணிகள் இருந்திருக்கின்றனர்.
புறப்படும் போது 35 பயணிகளை மட்டுமே ஏற்றியிருந்தாலும் வழியில் அது ஏராளமானோரை ஏற்றியிருக்கிறது.
ஒருவேளை அளவுக்கதிகமானப் பயணிகளை ஏற்றியிருந்ததும் விபத்துக்குக் காரணமாக இருக்கலாமா என்ற கோணத்தில் போலீஸ் விசாரிக்கிறது.
அவ்வகையில், உயிர் தப்பியவர்களிடம் இருந்து விவரங்களைச் சேகரிக்கும் பணியிலும் போலீஸ் ஈடுபட்டுள்ளது.
அவ்விபத்தை அடுத்து அம்மாகாணத்தில் 72 மணி நேர துக்கம் அனுசரிக்கப்படுகிறது.