
கோலாலம்பூர், அக் 3 – ஓய்வு பெற்ற பிறகும் தனியார் தொழிலாளர்கள் பாதுகாப்பை பெறுவதற்கு தனியார் தொழிலாளர்களின் சொக்சோ பாதுகாப்பிற்கான வயது வரம்பையும் மற்றும் சொக்சோ சந்தா தொகையையும் உயர்த்த வேண்டும் என முன்னாள் மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கோரிக்கை விடுத்துள்ளார். 2030 ஆம் ஆண்டு வாக்கில் நாடு அதிகமான வயதானவர்களை கொண்டிருக்கும் என்பதால் அதற்கு தயாராகுவதற்கு 1969ஆம் ஆண்டின் தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு சட்டத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ம.இ.காவின் தேசியத் துணைத்தலைவருமான சரவணன் கேட்டுக்கொண்டார்.
தனியார் துறையைச் சேர்நத தொழிலாளர்கள் பல ஆண்டு காலமாக சந்தா செலுத்துவதோடு நல்ல உடல் நிலையில் இருந்தாலும் 60 வயதடைந்து ஒரு நாளாகினாலும் சொக்சோவின் அணுகூலத்தை அவர்கள் பெறமுடியாது. இன்றைய தனியார் தொழிலாளர்களின் நிலை இப்போது இப்படித்தான் இருக்கிறது என தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன் சுட்டிக்காட்டினார்.