Latestமலேசியா

பெர்சத்துவின் 6 முன்னாள் எம்.பிக்கள் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்துவருவர் – சபாநாயகர் முடிவு

கோலாலம்பூர், ஜூலை 10 –  பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு ஆதரவு தெரிவித்ததற்காக   பெர்சத்து கட்சியியிலிருந்து  நீக்கப்பட்ட  அதன் ஆறு முன்னாள்  எம்.பிக்கள் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்துவருவர்.    நாடாளுமன்ற சபாநாயகர்   ஜொஹாரி அப்துல் ( Johari Abdul)  நேற்று இந்த முடிவை  செய்ததாக  பெர்சத்து கட்சித் தலைவர்  டான்ஸ்ரீ முஹிடின் யாசின்  இன்று நாடாளுமன்றத்தில்  நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.  

இது தொடர்பாக   நேற்று ஜூலை  9 ஆம் தேதி மாலையில்  ஜொஹாரி அப்துல்லிடமிருந்து    பெர்சத்து கட்சி   கடிதம் ஒன்றை  பெற்றதாக   அவர்  கூறினார். கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின்   49 A பிரிவின்படி   அந்த ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களின் இடங்கள் காலியாகவில்லையென்ற கடிதத்தை  பெர்சத்து பெற்றதாக முஹிடின் தெரிவித்தார்.  நாடு மற்றும் மக்களின் நலனுக்காக  நாடாளுமன்றத்தின் நிலைத்தன்மையை கருதி அந்த ஆறு எம்பிக்களின்  நாடாளுமன்ற தொகுதி காலியாகவில்லை என்ற  முடிவை தாம் எடுத்ததாக  சபாநாயகர் கூறியிருக்கும் காரணம் ஏற்புடையதாக இல்லையென முஹிடின் கூறினார். 

  கூட்டரசு அரசிலமைப்பு சட்டத்தின்  49  A  உட்பிரிவு  ( 3) இன்  விதிக்கு எதிராக  சபாநாயகரின் முடிவு  அமைந்திருப்பது குறித்து   முஹிடின் தனது ஏமாற்றத்தை தெரிவித்தார்.  நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தையும்  கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தையும்  தற்காக்கப் போவதாக   உறுதி மொழி எடுத்துக் கொண்டுள்ள சபாநாயகரின் முடிவு  மற்றும் அவரது நிலைப்பாடு  குறித்து அவர்    தெரிவித்திருந்த காரணங்கள் ஏற்றுக்கொள் முடியாத ஒன்று என  முஹிடின்  சுட்டிக்காட்டினார்.  

ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்த  நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்  அக்கட்சியின் உறுப்பினராக இனியும் இல்லையென்றால்  அந்த தொகுதி காலியாகிவிடும் என   கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டிருப்பதையும்  முஹிடின் சுட்டிக்காட்டினார்.   சம்பந்தப்பட்ட அந்த  ஆறு  நாடாளுமன்ற உறுப்பினர்களும் பெர்சத்துவின் உறுப்பினர்கள் இல்லையென்பது தெளிவாக  இருப்பதாக அவர்  தெரிவித்தார்.  அவர்களின் நாடாளுமன்ற இடங்களை காலி செய்வதற்கான காரணத்தை ஜொஹாரி வெளியிடவில்லை என்பதால்  கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தை நிலைநாட்டுவதற்காக  இந்த விவகாரம் தொடர்பாக   சட்ட வல்லுநர்களுடன்  பெர்சத்து கட்சி  ஆலோசனை நடத்தும் என  முஹிடின் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!