
கோலாலம்பூர். நவ 19 – அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பெர்சத்து கட்சித் தேர்தலில் அதன் தலைவர் பதவியை தற்காத்துக் கொள்வது குறித்து தாம் இன்னும் முடிவு செய்யவில்லை என்ற போதிலும் எந்தவொரு அதிகாரப் பரிமாற்றமும் கட்சியில் பிளவு ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்தப்படும் என டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்திருக்கிறார். 16 ஆவது பொதுத் தேர்தலுக்கு முன் கட்சியை சீரமைப்பு செய்வதற்கு தலைமைத்துவ மாற்றத்திற்கான நடவடிக்கை அவசியம் என கட்சி தலைவர்களில் ஒருவரான எடின் சியாஸ்லி ஷித் வலியுறுத்தியது தொடர்பில் பாகோ நாடாளுமன்ற உறுப்பினருமான முஹிடின் கருத்துரைத்துள்ளார்.
தற்போது பெர்சத்துவின் தலைமை செயலாளராக இருந்துவரும் எதிர்க்கட்சி தலைவருமான ஹம்ஸா ஸைனுடின் கட்சியில் முக்கிய பங்காற்றுவதற்கான நேரம் வந்துவிட்டதாகஎடின் சியாஸ்லி கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு நடைபெறும் பெர்சத்து தேர்தலில் கட்சித் தலைவர் பதவியை தற்காத்துக் கொள்வதா அல்லது போட்டியிடுவதில்லை என்ற முடிவு குறித்து தாம் இன்னும் முடிவு செய்யவில்லையென முஹிடின் கூறினார். இப்போதுதான் மலாய்க்காரர்கள் நம்மை ஆதரிக்கத் தொடங்கியுள்ளனர். எனவே எந்தவொரு அதிகார பரிமாற்றமும் கட்சி பிளவுபடுவதை அனுமதிக்கக்கூடாது என அவர் வலியுறுத்தினார்.