
கோலாலம்பூர், ஜூன் 30 – முறையான பெர்மிட் இன்றி வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருக்கும் முதலாளிகள் கைது செய்யப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ Hamzah Zainuddin தெரிவித்தார். ஏற்கனவே இது குறித்து பலமுறை எச்சரிக்கை வழங்கப்பட்டு விட்டதால் இனி சட்டத்தை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் நினைவுறுத்தினார். தங்களது தாயகத்திலிருந்து சட்டப்பூர்வமான கடப்பிதழ்கள் மற்றும் ஆவணங்களை கொண்டிருக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள் மட்டுமே இங்கு வேலை செய்ய முடியும் . எனவே வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருந்து கைது செய்யப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டால் உள்துறை அமைச்சை குறைகூறக்கூடாது என Hamzah Zainuddin கேட்டுக் கொண்டார். குடிநுழைவு சட்டத்தின் கீழ் கைது செய்யும் அதிகாரத்தை குடிநுழைவுத்துறை மற்றும் உள்துறை அமைச்சு கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.