
ஆராவ், பிப்ரவரி-18 – நேற்று தொடங்கிய புதியப் பள்ளி தவணையில் பெர்லிஸ் ஆராவ், Mata Ayer-ரில் உள்ள Kong Aik சீன ஆரம்பப் பள்ளியில், முதலாமாண்டில் ஒரு சீன மாணவர் கூட பதியவில்லை.
மாறாக, 13 மலாய்க்கார மாணவர்கள், 9 சயாமிய மாணவர்கள் ஓர் இந்திய மாணவர் மட்டுமே முதலாமாண்டில் காலடி எடுத்து வைத்துள்ளதாக, தலைமையாசிரியர் Kong Aik Leong Siang கூறினார்.
பள்ளியில் மொத்த மாணவர் எண்ணிக்கை 190 பேர் என்றும், அவர்களில் பெரும்பான்மையானோர் அதாவது 93 பேர் மலாய்க்காரர்கள் என்றார் அவர்.
முஸ்லீம் மாணவர்களுக்குப் போதிப்பதற்காக 4 சமய ஆசிரியர்கள் உட்பட மொத்தம் 17 ஆசிரியர்கள் அப்பள்ளியில் பணிபுரிகின்றனர்.
இவ்வேளையில், மாண்டரின் மொழி மீதுள்ள ஆர்வத்தால் இந்த Kong Aik போன்ற சீனப் பள்ளிகளுக்கு, சீனர் அல்லாத பெற்றோர்கள் குழந்தைகளை அனுப்புவதாக, பெர்லிஸ் மாநில கல்வி இயக்குநர் Rose Aza Che Arifin கூறினார்.
சீனப் பெற்றோர்களும் தங்களின் பிள்ளைகளை தேசியப் பள்ளிக்கு அனுப்புகின்றனர்.
ஆக, இது ஒற்றுமை உணர்வை பிரதிபலிப்பதாக அவர் சொன்னார்.