
கோலாலம்பூர், அக்டோபர் 3 – MYJalan இயக்கத்திற்கு ஏற்ப கடந்த ஆகஸ்ட்டு மாதம் அறிமுகம் கண்ட MYJalan செயலி மூலம், இதுவரை பொதுப்பணி அமைச்சு பத்து மடங்கு கூடுதலான புகார்களை பெற்றுள்ளது.
அந்த எண்ணிக்கை MYJalan செயலி அறிமுகம் காண்பதற்கு முன் கிடைத்த புகார்களை காட்டிலும் மிகவும் அதிகமாகும்.
அது ஒரு நேர்மறையான முன்னேற்றம் என, பொதுப்பணி அமைச்சர் டத்தோ ஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.
நாட்டின் சாலைக் கட்டமைப்புகள் பாதுகாப்பான முறையில் இருப்பதை உறுதிச் செய்வதில், மக்கள் காட்டும் அக்கரை மற்றும் அரசாங்கத்தின் முனைப்புக்கான சான்று அதுவென அமைச்சர் குறிப்பிட்டார்.
அதனால், சாலை பயனர்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சனைகள், குறிப்பாக, சேதமடைந்த குண்டும் குழியுமான சாலைகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு விரைந்து தீர்வுக் காண்பதோடு, அவர்கள் எளிதாக புகார் அளிக்கும் வகையில் MYJalan செயலியின் பயன்பாடும் தொடர்ந்து மேம்படுத்தப்படுமென அமைச்சர் உறுதியளித்தார்.