
குவந்தான், செப் 11 – பெளாங்கி இடைத்தேர்தலை முன்னிட்டு தேசிய முன்னணியின் தலைமைத்துவம் முடிவு செய்வதற்காக அறுவரின் பெயர்களை சாத்தியமான வேட்பாளராக பரிசீலிப்பதற்குப் பகாங் தேசிய முன்னணி பரிந்துரைக்கும் என மாநில தேசிய முன்னணி தலைவர் வான் ரோஸடி வான் இஸ்மாயில் தெரிவித்தார். செப்டம்பர் 23 ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கலுக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னதாக பெளாங்கி சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் முடிவு செய்யப்படுவார் என அவர் கூறினார்.
பெளாங்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த அம்னோவின் ஜொஹாரி ஹருன் கடந்த ஆகஸ்டு மாதம் 17 ஆம் தேதி ஷா அலாம் பண்டார் எல்மினாவில் நிகழ்ந்த சிறு ரக விமான விபத்தில் மரணம் அடைந்தார். பெளாங்கி சட்டமன்ற தொகுதி நீண்ட காலம் தேசிய முன்னணியின் கோட்டையாக இருந்தாலும் இந்த இடைத்தேர்தலை கட்சி சாதாரணமாக கருதாது என வான் ரோஸ்டி தெரிவித்தார்.