கோலாலம்பூர், நவம்பர்-18 – கசிவுகளைத் தடுக்க, பேக்கெட் எண்ணெய்க்கான மானியத்தை அகற்றுவது குறித்து அமைச்சரவைக் கலந்தாலோசித்துள்ளதாக பொருளாதார அமைச்சர் ரஃபிசி ரம்லி தெரிவித்துள்ளார்.
உதவித் தொகை அகற்றத்தால் சில விளைவுகள் உண்டு என்றாலும், எண்ணெய் மானியத்துக்கு அரசாங்கம் மில்லியன் கணக்கான ரிங்கிட்டை செலவிட வேண்டியிருப்பதையும் புரிந்துகொள்ள வேண்டுமென அவர் சொன்னார்.
உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் (KPDN) அதிகாரத்தின் கீழ் வரும் அவ்விவகாரம் பல முறை விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெரிய அளவிலான கசிவுகளின்றி எண்ணெய்க்கான உதவித் தொகையை வழங்கும் சரியான வழிவகை குறித்த KPDN-னின் அறிக்கைக்காக அமைச்சரவை காத்திருக்கும் என்றார் அவர்.
முறைகேடுகளையும் கசிவுகளையும் தடுக்கும் முயற்சியாக, பேக்கெட் சமையல் எண்ணெய்க்கான மானியத்தை அகற்றி விட்டு, அதற்கு பதிலாக இலக்கு வைக்கப்பட்டோருக்கு ரொக்க உதவியை வழங்குமாறு அரசாங்கம் முன்னதாக கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
என்னதான் அமுலாக்க நடவடிக்கை எடுத்தாலும், பல்வேறு வழிகளில் கசிவுகள் தொடர்ந்து நடக்கவே செய்வதால், உதவித் தொகையை அகற்றுவது சரியானதாக இருக்குமென, துறை சார் நிபுணர்கள் கூறினர்.
சந்தையில் விற்கப்படும் 1 கிலோ கிராம் எடையிலான உதவித் தொகைப் பெறப்பட்ட 60 மில்லியன் சமையல் எண்ணெய் பேக்கெட்டுகளில் 60 விழுக்காடு, குறு (micro) வியாபாரிகளால் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.