பேங்கோக், ஆகஸ்ட்-23 – தாய்லாந்து தலைநகர் பேங்கோக் அருகே, சிறிய ரக பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் அதிலிருந்த அனைத்து 9 பேரும் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது.
நேற்று நண்பகல் வாக்கில் பேங்கோக் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் அவ்விமானம் விபத்துக்குள்ளானது.
அதில் இரு விமானிகளும் ஏழு பயணிகளும் இருந்தனர்; சம்பவ இடத்தில் ஒருவரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லையென மீட்புக் குழு தெரிவித்தது.
இந்நிலையில், சுமார் ஒரு மணி நேர தேடுதலுக்குப் பிறகு, கடினமான சதுப்பு நிலப் பகுதியில், சிதைந்த நிலையில் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
விமானத்திலிருந்தவர்களின் அடையாளங்கள் அறிவிக்கப்படவில்லை;
என்றாலும் ஐவர் ஹோங் கோங் சுற்றுப் பயணிகள் என்றும், இருவர் தாய்லாந்து விமானப் பணிப் பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலுமிருவர் தாய்லாந்து விமானி மற்றும் துணை விமானி ஆவர்.
விமான விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.