பேங்கோக், நவம்பர்-23, தாய்லாந்து, பேங்கோக்கில் சிறுவர்களுக்கான மாந்திரீக போதனை சர்ச்சையில் சிக்கிய புத்தக் கோயிலொன்றில், மண்ணைத் தோண்ட தோண்ட சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அந்நாட்டையே உலுக்கியுள்ளது.
மொத்தமாக 12 சடலங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், அவற்றில் 4 சடலங்கள் அழுகிப் போன நிலையிலும் எஞ்சியவை எலும்புக்கூடுகளாகவும் மீட்கப்பட்டன.
அச்சடலங்களில் ஒன்று, 2 மாதங்களுக்கு முன்னர் சமயச் சடங்குக்காக கோயிலுக்கு தானமாகக் கொடுக்கப்பட்டது குடும்பத்தாரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
மரபணு பரிசோதனைகள் முடிந்ததும், முறையான நல்லடக்கச் சடங்கிற்காக சடலங்கள் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படுமென போலீஸ் கூறியது.
சிறுவர்களின் சடலங்களைத் திருடி மறைத்து வைத்த கோணத்தில் கோயில் நிர்வாகம் விசாரிக்கப்படுகிறது.
சம்பந்தப்பட்ட கோயில், சடலங்களை வைத்து சிறுவர்களுக்கு விசித்திரமான மாந்திரீக போதனையை நடத்தி வருவது முன்னதாக முகநூலில் அம்பலமானது.
‘மந்திரக் கண் மந்திரக் காதுகளைப்’ பெறும் இரகசியம் எனக் கூறி சிறார்கள் தவறாக வழிநடத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
எனினும் அதனை மறுத்த கோயில் சாமியார், சிறுவர்களுக்கு வாழ்க்கைத் தத்துவத்தைப் புரிய வைக்க சடலங்களை வைத்து பாடம் நடத்தியது உண்மைதான் என்பதை ஒப்புக் கொண்டார்.