
ஷா ஆலாம், பிப்ரவரி-1 – கிள்ளான் பள்ளத்தாக்கில் 6 மாவட்டங்களில் நிகழ்ந்த 8 கைப்பேசி திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில், 4 வெளிநாட்டவர்கள் கைதாகியுள்ளனர்.
அவர்கள் முறையே 31 வயது முதல் 61 வயதிலான 2 ஆடவர்கள், 2 பெண்கள் ஆவர்.
சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேய்ன் ஓமார் கான் அதனைத் தெரிவித்தார்.
செர்டாங், பெட்டாலிங் ஜெயா, சுபாங் ஜெயா, டாங் வாங்கி, செராஸ், செந்தூல் ஆகிய 6 மாவட்டங்களில் திருடுப் போன 12 iPhone-கள் உட்பட 13 கைப்பேசிகள் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த Geng NguYen கும்பலுக்கு 41 வயது வியட்நாமிய மாதுவே தலைவியாக இருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டது.
டிசம்பரில் மலேசியாவுக்கு வந்தவர்கள் ஒரு வாரம் தங்கி தாயகம் திரும்பி விட்டனர்.
பிறகு ஜனவரி 17-ஆம் தேதி மலேசியா திரும்பி ஒரே வாரத்தில் இங்குள்ள பேரங்காடிகளில் 8 முறை கைவரிசையைக் காட்டியுள்ளனர்.
மூவராக நடமாடும் அக்கும்பல் பேரங்காடிகளில் மக்கள் மும்முரமாக பொருட்களை வாங்கிக் கொண்டிருக்கும் போது, சாமர்த்தியமாக அவர்களின் கவனத்தைத் திசை திருப்பி கைப்பேசிகளைத் திருடி விடுகிறது.
திருடியக் கைப்பேசிகளை வியட்நாமுக்குக் கொண்டுச் சென்று விற்பதே அக்கும்பலின் வேலை.
கைதான எஞ்சிய ஒருவன், அவர்களின் காரோட்டியாக இருந்த ஜோர்டானிய ஆடவன் ஆவான்.